search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதலமைச்சர் ஆலோசனை"

    பேரிடர் மீட்பு பயிற்சியின்போது கல்லூரி மாணவி அடிபட்டு இறந்ததையடுத்து, சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை நடத்தினார். #CoimbatoreStudent #Logeshwari #TNCM
    சென்னை:

    கோவை அருகே தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நேற்று பேரிடர் மேலாண்மை பயிற்சி முகாம் நடைபெற்றது. ஆபத்து காலங்களில் கட்டிடங்களில் இருந்து குதித்து உயிர்தப்புவது குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. 

    இதற்காக, கல்லூரி கட்டிடத்தின் 2-வது மாடியில் இருந்து மாணவிகள் கீழே குதிக்கவும், அவர்களை வலை மூலம் பிடித்து காப்பாற்றுவது போலவும் பயிற்சி நடைபெற்றது.



    இந்த பயிற்சியில் பங்கேற்று, 2-வது மாடியில் இருந்து குதித்த மாணவி லோகேஸ்வரி முதல் மாடியில் உள்ள ஸ்லாப்பில் அடிபட்டு இறந்துபோனார். மாணவியை மாடியில் இருந்து குதிப்பதற்கு தயார்படுத்திய பயிற்சியாளர் ஆறுமுகம் கைது செய்யப்பட்டுள்ளார்.

    இந்த கோர விபத்து தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. முறையான பயிற்சி இன்றி மாணவிகளை வைத்து பேரிடர் மீட்பு ஒத்திகை நடத்தப்பட்டதாக பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

    இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. உயர்கல்வித்துறை அமைச்சர், உயர்கல்வித்துறை செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.  

    மாணவியை பேரிடர் மீட்பு ஒத்திகையில் ஈடுபடுத்துவதற்கு முன்பாக, அவருக்கு முறையான பயிற்சி அளித்தார்களா? விபத்துக்கு காரணமானவர்கள் மீது என்ன மாதிரியான நடவடிக்கை எடுப்பது? எதிர்காலத்தில் இதுபோன்ற பயிற்சிகளை எவ்வாறு முறைப்படுத்துவது? என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

    மாணவ மாணவிகளுக்கு பேரிடர் பயிற்சி அளித்தது தவறு என்றும், கல்லூரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் உதயகுமார் கூறியது குறிப்பிடத்தக்கது. #CoimbatoreStudent #Logeshwari #CollegeStudentDies #NDRF #TNCM

    ×